நீங்கள் பயன்படுத்தும் ஒரு பொருளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் அது தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்களா? அல்லது அதிகம் பிரபலமான பொருளை சற்று தரத்தில் குறைவாக இருந்தாலும் வாங்குவீர்களா?.. இதற்க்கு உங்களிடம் இரண்டு விதமான பதில்கள் இருக்கும். இங்கு பொதுவாகவே அது எத்துனை தரமாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் இல்லையென்றால் அதன் விற்பனை நினைத்த அளவிற்கு இருக்காது என்பதே உண்மை.
இப்ப இந்த விளம்பரம் எவற்றுக்கெல்லாம் தேவை என்றால் அது எல்லாவற்றுக்கும் தேவை என்பேன். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு வலைப்பக்கம் வைத்திருக்கிறீர்கள் அதில் சிறந்த தகவல்களையோ அல்லது சிறந்த இல்லகியத்தையோ எழுதுகிறீர்கள் ஆனால் உங்களை வாசிப்பவர் என்று பார்த்தால் அது ஒரு இருபது பேரில் இருந்து ஐம்பது பேருக்குள் மட்டுமே இருப்பார்கள். இதுவும் தமிழ்மணம், இன்லி போன்ற திரட்டிகளில் நீங்கள் இணைத்தால் மட்டுமே சாத்தியம். இப்போது உங்களுக்கு ஏன் மொக்கை பதிவுகள் ஓட்டு வாங்குகின்றன என்பதை விளக்க தேவையில்லை என நினைக்கிறேன். அது உங்களுக்கே புரியும். காரணம் இது பற்றி சமீபத்தில் சிபி.செந்தில்குமார் வரை சொல்லியிருக்கிறார்கள்.
இத்தாலியில் இரண்டு புகழ் பெற்ற சாக்லேட்டுகள் இருக்கின்றன. அதில் ஒன்று மிகுந்த தரமாக இருக்கும் ஆனால் அதன் பேக்கிங் அவ்வளவு நன்றாக இருக்காது. இன்னொன்று தரம் குறைவாக இருக்கும் ஆனால் அதற்கு பேக்கிங் அசத்தலாக இருக்கும். இரண்டுமே நன்றாக போகிறது சொல்லப்போனால் இரண்டுமே ஒரே விலை. இப்ப தரமான சாக்லேட்டுக்கு விளம்பரம் மற்றும் பேக்கிங் நன்றாக செய்தால் விலை அதிகம் இருந்தாலும் இதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். சென்னை சரவணபவன் ஓட்டலில் நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அவர்கள் விரைவு உணவகம், அமர்ந்து சாப்பிடும் உணவகம், பணக்காரர்களுக்காக அதிக விலையுடன் கூடிய ஏசி உணவகம் என மூன்று விதமாக வைத்திருக்கிறார்கள். இதில் விரைவு உணவகத்தில் விற்கும் உணவும், அமர்ந்து சாப்பிடும் உணவகத்தில் விற்கும் உணவும் ஒரே மாதிரியான தயாரிப்பு ஆனால் விரைவு உணவகத்தில் விலை குறைவாக இருக்கும். காரணம் எல்லா விதமான வாடிக்கையாளர்களையும் அவர்கள் விட்டுவிட விரும்பவில்லை.
தினகரன் பத்திரிக்கை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 2005 ஆண்டு கலாநிதி மாறன் தினகரன் பத்திரிக்கை வாங்குவதற்கு முன் தி.மு.க காரர்கள் மட்டுமே வாங்கிப்படித்த பத்திரிக்கை அது. அதன்பிறகு ஒரு ரூபாய்க்கு அதனை விற்று பரபரப்பாக்கி இன்றைக்கு தமிழின் No.1 நாளிதழ் அதுவாகவே மாறிவிட்டது. இன்றைக்கு மூன்று ரூபாய் ஆக மாறிவிட்டது. ஆனால் இனி அதனை படிப்பவர்கள் தொடர்ந்து படிக்கவே செய்வார்கள். தனி நபர் வலைப்பக்கம் என்றாலும் அல்லது மிகப்பெரிய நிறுவனம் என்றாலும் உங்களை சரியாக கொண்டு சேர்க்கும் உத்தி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களால் வெற்றிபெறவே முடியாது. இன்றைக்கு உங்கள் குழந்தைகள் தொலைகாட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்கித்தர அடம்பிடிக்க காரணம் அந்த பொருட்களை விளம்பர படுத்த பெரியவர்கள் சிந்தித்ததுதான்.
இப்ப தரம் இருக்கு, விளம்பரம் செய்து பெரிய அளவில் விற்பனை ஆகிறது, உங்கள் விளம்பரங்களை குறைக்க வேண்டுமா என்றால், உங்களுக்கு ஒரு போட்டியாளர் வராதவரைக்கும் குறைக்கலாம். ஆனால் போட்டியாளர் வந்துவிட்டால் மீண்டும் முன்னைவிட பலமாக விளம்பரம் செய்ய வேண்டியிருக்கும். ஹமாம் சோப் அந்த உத்தியைதான் கையாள்கிறது. இன்றைக்கு இந்துஸ்தான் லீவரின் பொருட்கள்தான் நாம் அன்றாடம் பயன்படுத்துவதில் பெருமளவு இருக்கிறது. எத்தனை பேருக்கு ஒரே நிறுவன பொருட்களைத்தான் பயன்படுத்துகிறோம் என்கிற விவரம் தெரியும். நான் பொதுவாகவே சோப் மற்றும் அன்றாட உபயோக வாங்கும்போது எது இலவசங்களுடன் அல்லது தள்ளுபடி விலையில் வருகிறதோ அதையே வாங்குவேன். காரணம் விளம்பரத்திற்காக விலையில் சமரசம் செய்துகொள்ளும் தருணம் அது. நாம்தான் அதனை புத்திசாலிதனமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காதி கிராப்டில் கிடைக்கும் நிறைய பொருட்கள் மிக தரமானவை ஆனால் பெரும்பான்மையாக விவரமான ஒருசிலரே பயன்படுத்துகின்றனர். இங்கு விளம்பரம் கிடையாது. தரமும் இருக்கும் ஆனால் சந்தை வாய்ப்பு வெகு சொற்பமே.
கோகோ கோலா, பெப்சி பற்றி பேசுவோம். டாஸ்மாக் பானங்களை குடிப்பவர்களுக்கு அறிவுரை கூறும் நண்பர்கள் இதனை பற்றி அறியாமல் இருப்பது ஆச்சர்யமே. முழுக்க உடலுக்கு கேடு விளைவிக்கும் பானங்கள் இவை . இதனைத்தான் நாம் நம் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுக்கிறோம். ஒரு லிட்டர் பெப்சியோ, கோக்கோ, இன்னபிற வஸ்துகளோ, அது தயாரிக்க ஆகும் செலவு வெகு சொற்பமே. ஆனால் விளம்பரம் செய்தது மக்களை அடிமையாக்கி இன்று உலகம் முழுதும் அது விற்பனையில் கொடிக்கட்டி பறக்கிறது. குடிக்கும் பாலில் அது கேட்டுப் போகாமல் இருக்க யூரியா கலக்கிறார்கள். ஹைட்ரஜன் பெராக்சைடு அதில் இருக்கும் அழுக்கை நீக்க பயன்படுத்துகிறார்கள். பாலுக்கு பற்றாக் குறை கடுமையாக இருக்கிறது, ஆனால் அப்படி பற்றாக்குறை இருக்கும்போதே நிறைய நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. காரணம் சொல்லவேண்டியதில்லை.
"சரக்கு முறுக்கா இருந்தா பத்தாது; செட்டியாரும் முறுக்கா இருக்கணும்"
என்கிற சொலவடை தமிழில் இருக்கிறது..
Post a Comment