10 முதல் 18 பேர் செல்லும் விமானங்களை தயாரிக்க மஹிந்திரா திட்டம்

பெங்களூர்: சுற்றுலா துறைக்கு பயன்படும் வகையில், 10 முதல் 18 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட சிறிய ரக விமானங்களை தயாரிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் மாபெரும் நிறுவனமாக வளர்ந்து வரும் மஹிந்திரா குழுமம், மஹிந்திரா ஏரோஸ்பேஸ் என்ற துணை நிறுவனத்தின் பெயரில் விமான தயாரிப்பிலும் கால் பதித்துள்ளது.

நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரியுடன் இணைந்து 5 பேர் பயணம் செய்யும் வகையில் பிஸ்டன் எஞ்சின் பொருத்தப்பட்ட என்எம்-5 என்ற பெயரில் சிறிய புரோட்டோ டைப் விமானத்தை வடிவமைத்துள்ளது.

இந்த சிறிய ரக விமானம் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து சோதனைஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விமானம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை கருதி, 10 முதல் 18 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட சிறிய விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்விந்த் மெஹ்ரா கூறியதாவது:

" ஆண்டுதோறும் இந்தியாவில் 1.5 கோடி சுற்றுலாப் பயணிகளும், 1.5 கோடி பக்தர்களும் ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் மூலம் சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோயில்களுக்கு செல்கின்றனர்.

ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலாத்துறையில் சிறிய ரக விமானங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, 10 முதல் 18 பேர் வரை பயணம் செய்யும் வசதி கொண்ட விமானங்களை தயாரிக்க உள்ளோம்.

இதற்காக, பெங்களூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள நரசபுரா என்ற இடத்தில் புதிய தொழிற்சாலையை கட்டி வருகிறோம். இன்னும் ஓர் ஆண்டுக்குள் அரசிடமிருந்து சிறிய விமானங்கள் தயாரிப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று கூறினார்.

இந்த நிலையில், சிறிய விமானங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்காக அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தும் முயற்சிகளையும் மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. [
தேங்க்ஸ் TO http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2011/3-mahindra-aerospace-plans-build-10-18-seat-aeroplanes-aid0173.html
0 Responses

Post a Comment